by Bella Dalima 13-02-2018 | 6:38 PM
Colombo (Newsfirst)
கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என சுயேட்சைக் குழு அறிவித்துள்ளது.
நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்திருந்தாலும், அது குறித்து பரிசீலிக்க வேண்டிய தேவை இல்லை என சுயேட்சைக்குழுத் தலைவர் எம்.எச்.எம்.நௌஃபர் கூறியுள்ளார்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் காலத்தில், கல்முனை பிரதேச சபை நகர சபையாக மாற்றப்பட்டது.
அவரின் இழப்பின் பின்னர் 2001 ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபை உருவாக்கப்பட்டது.
அதன் பின்னர் மாநகர சபைத் தேர்தல் காலங்களில் மேயர் பதவியை யாருக்கு வழங்குவது என்ற சர்ச்சை கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மத்தியில் நீடித்தது.
2012 இல் சாய்ந்தமருதில் போட்டியிட்ட சிராஸ் மீராசாஹிப் மற்றும் கல்முனையில் போட்டியிட்ட நிஸாம் காரியப்பர் ஆகியோருக்கு இடையிலான பிரச்சினைக்கு தீர்வாக இருவருக்கும் மேயர் பதவிகளை இரண்டு வருடங்களுக்குப் பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர், சிராஸ் மீராசாஹிப் முதலில் மேயர் பதவியைப் பெற்றுக்கொண்டார்.
அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்னர் ஏற்பட்ட முரண்பாட்டினால், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையின் படி நிஸாம் காரியப்பருக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது.
இதன் பின்னர் சாய்ந்தமருது பகுதிக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் அவசியம் என தெரிவித்து சாய்ந்தமருதில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
நவம்பர் மாதம் முதலாம் திகதி சாய்ந்தமருது பிரகடனம் வௌியிடப்பட்ட பின்னர், அரசியல்வாதிகளின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர், உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் சுயேட்சைக் குழுவொன்றை களமிறக்கத் தீர்மானித்தனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவின் பிரகாரம், 40 ஆசனங்கள் கொண்ட கல்முனை மாநகர சபைக்கு சுயேட்சைக்குழு 4 இல் போட்டியிட்டு, 22.54 வீத வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், 29.66 வீத வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 7 ஆசனங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 5 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும் கல்முனை மாநகர சபையில் பெற்றுள்ளன.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய காங்கிரஸ், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுயேட்சைக்குழு 2 ஆகியன தலா ஒரு ஆசனங்களை தக்கவைத்துக் கொண்டன.
இதேவேளை, 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 48.69 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், கடந்த 4 ஆம் திகதி சாய்ந்தமருதில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டம் இடம்பெற மக்கள் எதிர்ப்பு வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.