எவருடனும் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை: ஐ.ம.சு.கூ

தனித்து ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவது குறித்து எவருடனும் இணக்கப்பாடில்லை: மஹிந்த அமரவீர

by Bella Dalima 13-02-2018 | 7:30 PM
Colombo (Newsfirst) ஒரு கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்து, எந்தவொரு தரப்பினருடனும் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 167 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வட்டார முடிவு மற்றும் பட்டியலில் நியமிக்கப்பட வேண்டிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், தொகுதி அமைப்பாளர் மற்றும் மாவட்டத் தலைவர்களின் பரிந்துரையின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டியல் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயங்களை அவர் வௌியிட்டுள்ளார்.