by Bella Dalima 13-02-2018 | 4:05 PM
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன் ஜூனியர் ட்ரம்பின் வீட்டிற்கு வந்த மர்ம கடித உறையில் இருந்த வெள்ளை நிறப்பொடியை முகர்ந்து பார்த்த அவரது மருமகள் வெனிசா மயங்கியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் ஜூனியர் டொனால்ட் ட்ரம்ப் தந்தைக்கு உதவியாக, அவரது செய்தித் தொடர்பாளராக இருந்து வருகின்றார்.
இவர் தனது மனைவி வெனிசாவுடன் மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஜூனியர் ட்ரம்ப் வீட்டு முகவரிக்கு நேற்று (12) மர்ம கடித உறை ஒன்று வந்துள்ளது. அதை வாங்கி, வெனிசா பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது அதில் வௌ்ளை நிறப் பொடி இருந்ததைப் பார்த்ததும் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, வீட்டில் இருந்த வெனிசாவின் தாய் உள்ளிட்ட வேறு சிலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக, அம்பியூலன்ஸ் வரவழைக்கப்பட்டு, வெனிசா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுபோலவே அங்கிருந்த மற்றவர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.தனது மனைவி
வெனிசா நலமுடன் இருப்பதாக ட்ரம்ப் ஜூனியர் ட்வீட் செய்துள்ளார்.
ட்ரம்ப் மகனின் வீட்டிற்கு வந்த மர்ம கடித உறையில் இருந்த வெள்ளை நிறப்பொடி குறித்து தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதை அனுப்பியவர்கள் குறித்த விபரமும் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு முக்கிய நபர்களுக்கு ஆந்த்ராக்ஸ் பொடி அடங்கிய கடித உறைகள் வந்தன. ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய நபர்களைக் கொலை செய்யும் நோக்குடன் இவ்வாறான தபால் உறைகள் அனுப்பப்பட்டன.
இதபற்றி தகவல் பரவியதும் அவை கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.