பதவி விலக மறுக்கும் ஜேக்கப் ஷூமா

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஷூமா பதவி விலக மறுப்பு

by Bella Dalima 13-02-2018 | 4:48 PM
தென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஜேக்கப் ஷூமா, அதிபர் பதவியில் இருந்து விலக மறுப்புத் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஷூமா (75) கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், பாராளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், வாக்கெடுப்பில் அவர் தோல்வியடையும் நிலையும் உருவாகியுள்ளது. ஆகவே, அவர் வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் ANC கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆனால், பதவி விலக அவர் மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவும் முடிவு செய்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் தபோம்பெகி என்பவருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. அவர் பதவி விலகியதும் ஷூமா புதிய அதிபரானமை சுட்டிக்காட்டத்தக்கது.