by Staff Writer 12-02-2018 | 7:22 PM
COLOMBO (Newsfirst) - இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மலையகத்தில் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் அநேகமான உள்ளூராட்சி சபைகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.
தேர்தல் முடிவுகளின் பிரகாரம் நோர்வூட் , கொட்டகலை மற்றும் அக்கரபத்தனை ஆகிய பிரதேச சபைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மஸ்கெலியா பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியும் தலா 7 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலும் வாக்கு எண்ணிக்கைக்கு அமைய தொழிலாளர் காங்கிரஸ் முன்னிலைப் பெற்றிருந்தது.
இதனைத் தவிர ஹட்டன் டிக்கோயா, தலவாக்கலை நகர சபைகள், அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகளிலும் மலையக மக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு அதிக வாக்குகளை அளித்திருந்தனர்.
இந்த உள்ளூராட்சி சபைகளில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆட்சியமைக்க ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஆளும் தரப்பாக மாறியுள்ளது.
மாவட்டத்தின் ஏனைய பிரதேச சபைகளான கொத்மலை, ஹங்குரான்கெத்த மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச சபைகளில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர்.
நுவரெலியாவிலுள்ள 12 உள்ளூராட்சி மன்றங்களில் 11 உள்ளூராட்சி மன்றங்களில் ஆளும் தரப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.
நுவரெலியா மாநகர சபையின் ஆட்சியை மாத்திரம் ஐக்கிய தேசியக் கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன், மற்றும் இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தன.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அமைச்சர் திகாம்பரம் ஹெலிகொப்டரில் சென்றிருந்தார்.
பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டுள்ளது.
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் 7 உறுப்பினர்களை கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு இம்முறை 20 இற்கும் மேற்பட்ட ஆசனங்கள் கிடைத்துள்ளன.
பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.
ஹல்துமுல்லை மற்றும் ஹப்புத்தலை பிரதேச சபைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவோடு பண்டாரவளை நகர சபைக்கு கடிகாரம் சின்னத்தில் களமிறக்கப்பட்ட சுயேட்சைக் குழு ஆட்சியை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நுவரெலியாவில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டினை பதுளையிலும் தொடர்ந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களைத் தவிர்ந்த, கொழும்பு உள்ளிட்ட மேலும் சில மாவட்டங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.