உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (முழுமையான விபரங்கள்)

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி: வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சி ஆதிக்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு மலையக மக்கள் அங்கீகாரம்

by Bella Dalima 11-02-2018 | 8:52 PM
Colombo (Newsfirst) இம்முறை உள்ளூராட்சி மன்றத் ​தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 222 உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 41 உள்ளூராட்சி மன்றங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 34 உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 7 உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்ற முடிந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி 34 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை பெற்றிருந்தாலும், ஒரு சில இடங்களில் அக்கட்சி தனித்து ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன 2 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலையிலுள்ளது. வடக்கு: யாழ். மாவட்டத்தின், வலிகாமம் தென் மேற்கு, வலிகாமம் மேற்கு, ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. காரைநகர் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு என்பன தலா 3 ஆசனங்களுடன் சமநிலையிலுள்ளன. பருத்தித்துறை நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. நல்லூர் பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவுகின்றது. யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 13 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 10 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றியீட்டியுள்ளது. அங்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 6 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை நகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 7 ஆசனங்களுடன் முன்னிலை பெற்றுள்ளதுடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன தலா 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. நெடுந்தீவு பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றியீட்டியுள்ளது. ஊர்காவற்துறை பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 7 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களுடன் முன்னிலையில் உள்ளது. யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஆட்சியையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களுடன் முன்னிலை பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன தலா 7 ஆசனங்களைப் பெற்றுள்ளன. பருத்தித்துறை பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான உத்தியோகப்பூர்வ தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பூநகரி பிரதேச சபை, பச்சிளைப்பள்ளி பிரதேச சபை மற்றும் கரைச்சி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ளது. எனினும், சுயாதீன குழுவின் கீழ் போட்டியிட்ட வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களை இந்த மூன்று பிரதேச சபைகளிலும் கைப்பற்றியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை வௌியான முடிவுகளின் பிரகாரம், இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 6 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 2 ஆசனங்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது. சுமார் 4 தசாப்தங்களின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சந்தித்த கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் அதிகாரத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது. மன்னார் முசலி பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஏனைய 9 ஆசனங்களும் 5 கட்சிகளிடையே பகிரப்பட்டுள்ளன. நானாட்டான் பிரதேச சபை மற்றும் மன்னார் நகர சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சி 35 வீத வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன், முசலி பிரதேச சபையையும் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது. நானாட்டான், மன்னார் பிரதேச சபைகள் மற்றும் மன்னார் நகர சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. வவுனியா நகர சபை, வெங்கலசெட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே வெளியான முடிவுகள் திருத்தியமைக்கப்பட்டு மீண்டும் இந்த சபைக்கான முடிவு அறிவிக்கப்பட்டது. வெங்கலசெட்டிக்குளம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 11 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதுடன், தேசிய காங்கிரஸ் இரண்டு உள்ளூராட்சி மன்றங்களை தன் வசப்படுத்தியுள்ளது. திருகோணமலை நகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 4 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச சபையை இலங்கை தமிழரசுக் கட்சி 26 வீத வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 22 வீத வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. திருகோணமலை - கோமரங்கடவல பிரதேச சபையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 8 ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளது. திருகோணமலை- சேருவில பிரதேச சபையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 6 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்களையும் பெற்றுள்ளது. திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. திருகோணமலை மூதுர் பிரதேச சபையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. இதேவேளை, திருகோணமலை மொரவெவ பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன தலா 4 ஆசனங்களைப் பெற்றுள்ளன. திருகோணமலை கிண்ணியா நகர சபையில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், பதவிசிறிபுர பிரதேச சபைகளின் ஆட்சியை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தம்வசப்படுத்திக்கொண்டது. திருகோணமலை - குச்சவௌி பிரதேச சபை ஆட்சியை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களுடன் கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தலா 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. இதேவேளை, திருகோணமலை வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 17 ஆசனங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியன தலா 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ​தேசியக் கட்சி ஆகியன தலா 3 ஆசனங்களைப் பெற்றுள்ளன. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியன தலா 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. மட்டக்களப்பு - கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் சுயேட்சைக்குழு 8 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. ஏறாவூர்பற்று பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையை இலங்கை தமிரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதுடன், காத்தான்குடி நகர சபை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசமானது. மண்முனைப்பற்று மற்றும் போரத்தீவு பற்று ஆகிய பிரதேச சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. ஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் - அக்கரைப்பற்று மாநகர சபையை 64.4 வீத வாக்குகளைப் பெற்று தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அம்பாறை நகர சபையின் ஆட்சி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வசமானது. அம்பாறை - காரைத்தீவு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இறக்காமம், பொத்துவில் பதியத்தலாவ, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. திருக்கோவில் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. கல்முனை மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியுள்ளது. நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன சமநிலை பெற்றுள்ளன. லாகுகல, தெஹியத்தகண்டிய, மகாஓய, தமன ஆகிய பிரதேச சபைகளில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னிலை பெற்றுள்ளது. மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு மக்கள் மீண்டும் ஆதரவளித்துள்ளனர். இதன் பிரகாரம், மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நோர்வூட் பிரதேச சபையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அக்கரப்பத்தனை பிரதேச சபையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. நுவரெலியா பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சி 9 ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. நுவரெலியா மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது. அத்துடன், கொத்மலை பிரதேச சபையின் ஆட்சியையும் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது. ஹட்டன் - டிக்கோயா நகரசபையை ஐக்கிய தேசியக் கட்சி தன் வசப்படுத்தியுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா 7 ஆசனங்களைப் பெற்றுள்ளன. கொட்டகலை பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 6 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. தலவாக்கலை - லிந்துலை நகர சபையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 3 ஆசனங்களை வென்றுள்ளது. பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை மாநகர சபையை சுயேட்சைக்குழு (1 ) கைப்பற்றியுள்ளது. பதுளை மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி குறைந்த ஆசனங்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. ஹப்புத்தளை நகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கைப்பற்றியுள்ளதுடன், ஹாலி எல பிரதேச சபையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னிலை பெற்றுள்ளது. பதுளை எல்ல பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் தலா 7 ஆசனங்களைப் பெற்றுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. கண்டி மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி 19 ஆசனங்களுடன் கைப்பற்றியுள்ளது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 16 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் ஒருமித்த முற்போக்கு கூட்டணி 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.