நாட்டின் சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவு

வாக்களிப்பின் பின்னர் நாட்டின் சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவு

by Bella Dalima 11-02-2018 | 7:04 PM
Colombo (Newsfirst) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பின் பின்னர் நாட்டின் சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. புத்தளம் - முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமீரகம சேவைகள் இல்லத்தின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சேவைகள் இல்லத்தில் நேற்று முதலாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இந்த தாக்குதல் காரணமாக குறித்த சேவைகள் இல்லத்தின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த பெயர்ப்பலகை, கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் கற்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, கற்பிட்டி பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியல் வேட்பாளர் நூர்தீன் நலீனின் வீட்டின் மீதும் இன்று அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலை - குச்சவௌி பகுதியில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதன்போது காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குச்சவௌி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தலவாக்கலை - வட்டகொட யொக்ஸ்ஃபோர்ட் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு 8 மணியளவில் இரண்டு கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.