அரசிற்குக் கிடைத்த மக்கள் ஆணை இரத்தாகியுள்ளது

அரசாங்கத்திற்குக் கிடைத்த மக்கள் ஆணை இரத்தாகியுள்ளது: பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகள்

by Bella Dalima 11-02-2018 | 7:24 PM
Colombo (Newsfirst) தேர்தல் வெற்றியின் ஊடாக அரசாங்கத்திற்குக் கிடைத்த மக்கள் ஆணை இரத்தாகியுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்தன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வௌியான சந்தர்ப்பத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் இருந்தார். அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் இன்று காலை முதல் அங்கு சென்று முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து வருகின்றனர். இதேவேளை, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்ததாவது, ''மஹிந்த ராஜபக்ஸவுக்கு கிடைத்த வெற்றி பாரிய வெற்றியாகும். அரசாங்கத்தின் மக்கள் ஆணை இரத்தாகியுள்ளது. மக்கள் ஆணையை இழந்த அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என மொட்டுடன் இணைந்துள்ள அனைத்து கட்சிகளும் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் கூறுகின்றோம். பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் தெரிவித்ததாவது, ''நாட்டை நிர்வகிப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை. ஒரே குரல், ஒரே கருத்து. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியொன்று நாட்டில் பதிவாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்ததாவது, தேர்தல் முடிவுகளின் பின்னரும் தொடர்ந்தும் தமது ஆசனத்தில் இருக்க வேண்டும் என எவரேனும் எண்ணுவார்கள் எனின், அவர்களுக்கான விதியை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள். துன்பங்களை ஏற்படுத்தாமல் வௌியேறுங்கள்.