அடுத்த சில நாட்களில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறும்

அடுத்த சில நாட்களில் பல முக்கிய மாற்றங்கள் இடம்பெறும்: ஜனாதிபதி அறிவிப்பு

by Bella Dalima 11-02-2018 | 5:52 PM
அடுத்த சில நாட்களில் பல முக்கிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இன்று அறிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வௌியானவுடன் இன்று மதியம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்றக் குழுவை சந்தித்த ஜனாதிபதி பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னர் இந்த கலந்துரையாடல் தொடர்பில் கட்சியின் உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டனர். அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்ததாவது,
அரசியலமைப்பின் படி நாட்டின் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் தொடர்பில் எமக்கு தீர்மானிக்க முடியாது. எனினும், அரசியலமைப்பில் பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், அனைத்துக் கட்சிகளுடனும் சினேகப்பூர்வமாகக் கலந்துரையாட வேண்டும். அவ்வாறு கலந்துரையாடி மிக விரைவில் நாட்டிற்குப் புரியும் வகையிலான மாற்றமொன்றை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி கூறினார். தேர்தல் காலத்திலும் அவர் இதனைக் கூறினார். அதற்கு மேலதிகமாக எதனையும் புரிந்துகொள்ள முடியாது. மாற்றம் என்ன என்பதனை இன்னும் ஒரு சில நாட்களில் புரிந்துகொள்ள முடியும்.
இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்ததாவது,
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவே மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டங்கள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி தௌிவாகக் கூறினார்.