வடகொரிய அதிபரின் தங்கையை கௌரவித்த தென்கொரிய அதிபர்

வட கொரிய அதிபரின் தங்கையை விருந்தளித்து கௌரவித்துள்ளார் தென் கொரிய அதிபர்

by Bella Dalima 10-02-2018 | 5:44 PM
குளிர்கால ஒலிம்பிக்கை முன்னிட்டு தென் கொரியா சென்றுள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியை, தென் கொரிய அதிபர் விருந்தளித்து கௌரவித்துள்ளார். வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் நீண்ட காலமாக பகைமை நிலவி வருகிறது.   வட கொரியாவின் தொடர் அணு ஆயுதத் திட்டங்கள், ஏவுகணைத் திட்டங்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் எப்போதும் பதற்ற நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்று (09) ஆரம்பமானது.   இந்தப் போட்டியில் வட கொரியாவும் பங்கேற்றுள்ளதுடன், இதற்காக தடகள வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் என 280 பேர் கொண்ட வட கொரியக் குழு, தென் கொரியா சென்றுள்ளது. வட கொரியக் குழுவின் தலைவராக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோங் நாம் தென் கொரியா சென்றுள்ளார்.   இந்த நிலையில், தென் கொரியாவின் பியோங்யாங் நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க விழாவை முன்னிட்டு தென் கொரிய அதிபர் விருந்தளித்துள்ளார். இந்த விருந்தில் வட கொரிய அதிபரின் சகோதரி கிம் யோங் நாம் கலந்துகொண்டார்.   தென் கொரிய அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்து உபசாரத்தின் போது, தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், கிம் யோங் நாம் உட்பட வட கொரியாவின் அனைத்து முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார். எவ்வாறாயினும், வட கொரியா - தென் கொரியா இடையே மீண்டும் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை தொடருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.   1950-53 ஆண்டு நடைபெற்ற கொரியப் போருக்கு பின்னர் வட கொரியாவில் ஆட்சி செய்யும் குடும்ப உறுப்பினர், தென் கொரியாவிற்கு சென்றுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.