சுமார் நாற்பது வருடங்களின் பின்னர் தேர்தல் காணும் வடக்கின் இரண்டு பிரதேச சபைகள்

சுமார் நாற்பது வருடங்களின் பின்னர் தேர்தல் காணும் வடக்கின் இரண்டு பிரதேச சபைகள்

சுமார் நாற்பது வருடங்களின் பின்னர் தேர்தல் காணும் வடக்கின் இரண்டு பிரதேச சபைகள்

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2018 | 7:56 pm

கொழும்பு (நியூஸ்ஃபெஸ்ட்)

முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளில் சுமார் நாற்பது வருடங்களின் பின்னர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் 1970ஆம் ஆண்டில் இறுதியாக நடத்தப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு 207 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் அவர்களில் 20 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

25 வீத பெண் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தெரிவாகும் உறுப்பினர்களில் ஐந்து பெண்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு 231 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 5 பெண்கள் அடங்கலாக 21 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர்.

புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் 2015 பெப்ரவரி 28 ஆம் திகதி நடத்தப்படவிருந்தது.

எனினும், அந்தத் தேர்தலை தடை செய்யும் வகையில் உயர் நீதிமன்றம் 2015 பெப்ரவரி 27ஆம் திகதி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

இரண்டு பிரதேச சபைகளையும் சேர்ந்த வாக்காளர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்ததன் பின்னர், பிரியசாத் டெப், சரத் அப்ரூ மற்றும் அனில் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் குழாமினால் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

2011 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைய தேர்தல் இடம்பெற்றால், வாக்களிப்பதற்கு புதிதாக தகுதி பெறும் வாக்காளர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் இல்லாமற்போவதாக வாக்காளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எச்.ஹிஸ்புல்லா
நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய 2011 ஆம் ஆண்டிலும் ஒத்திவைக்கப்பட்டது.

கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேற்றம் செய்யப்படாமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தலை ஒத்தி வைக்குமாறு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்