கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு பிடியாணை

11 இளைஞர்கள் கடத்தல்: விசாரணைகளிலிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரை நீக்குமாறு பிரதிவாதிகள் தரப்பு கோரிக்கை

by Bella Dalima 08-02-2018 | 9:29 PM
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளிலிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரை நீக்குமாறு கோரி பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள், கோட்டை நீதவானிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கின் பிரதிவாதிகளான கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் D.K.P. தசநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளில் இருந்தே குற்றப்புலனாய்வுப் பிரிவினரை நீக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த கோரிக்கையை சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆட்சேபித்துள்ளார். பிரதிவாதிகளின் கோரிக்கை தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான், வழக்கின் 8 ஆம் மற்றும் 9 ஆம் சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கடற்படை கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி வௌிநாடு செல்வதைத் தடுக்குமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் நாட்டிற்கு வரும் சந்தர்ப்பத்தில் அவரைத் தடுத்து வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியைக் கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணையை ஆங்கில மொழியில் வௌியிடுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.