உள்ளூராட்சி தேர்தல் - நீங்கள் அறிய வேண்டியவை

புதிய தேர்தல் முறையின் பிரதான அம்சங்கள் என்ன?

by Staff Writer 08-02-2018 | 2:21 PM
COLOMBO (Newsfirst)   2015ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை மக்கள் மீண்டும் ஒரு தடவை நாடளாவிய ரீதியிலான ஒரு தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளனர். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தேசிய மட்டத்தில் அவ்வளவாக முக்கியத்துவம் பெறாத போதிலும் இம்முறை தேர்தல் கிராமிய மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் அதிக முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு விடயமாக மாறியுள்ளது. இதற்கு நாடளாவிய ரீதியில் ஒரே தினத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகின்றமை, புதிய தேர்தல் முறைமை, கட்சிகள் தமது மக்கள் மத்தியில் தமக்கு இருக்கும் பலத்தை நிரூபிக்க முயற்சிக்கின்றமை என பல காரணங்களைக்  கூறலாம். சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் விகிதாசார தேர்தலில் வாக்களித்த இலங்கை மக்கள் இம்முறை கலப்புத் தேர்தல் முறையின் கீழ் வாக்களிக்க உள்ளனர். 20​12ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூராட்சி சபை தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் கீழ் நடைபெற உள்ள இந்த தேர்தலில் ஒரு கோடி ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 24 மாநகர சபைகளுக்கும், 41 நகர சபைகளுக்கும், 276 பிரதேச சபைகளுக்குமாக மொத்தமாக 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், இந்த தேர்தல் முறை குறித்து இலகுவான முறையில் விளக்கத்தினை வழங்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

புதிய தேர்தல் முறையின் பிரதான அம்சங்கள் என்ன?

தொகுதி நிர்ணயம் பொதுவாக கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு தொகுதிகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு அல்லது சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய வாக்காளர்களைக் கொண்டு ஒவ்வொரு தொகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனவே, வாக்காளர்களுக்கு மிகவும் அண்மித்த மிகவும் பரீட்சயமான பகுதியே அவர்களின் தொகுதியாகும். அந்த அடிப்படையில் ஒட்டுமொத்த இலங்கையும் 4919 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஒரு உறுப்பினர் தொகுதி (இந்த தொகுதியில் இருந்து ஒரு உறுப்பினர் மாத்திரம் தெரிவு செய்யப்படுவார்), பல் உறுப்பினர் தொகுதி (இந்த தொகுதியில் இருந்து இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்). உறுப்பினர்கள் தெரிவு இந்த தேர்தலில் தொகுதி அடிப்படையிலும் விகிதாசார அடிப்படையிலுமான கலப்பு முறைமையின் கீழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ஒரு உள்ளூராட்சி மன்றத்திற்கான மொத்த உறுப்பினர்களில் 60 வீதமானவர்கள்  தொகுதி முறைமையின் கீழ் வாக்காளர்கள் அளிக்கும் நேரடி வாக்குகளின் அடிப்படையிலும் 40 வீதமானவர்கள் விகிதாசார முறைமையின் கீழும் தெரிவு செய்யப்படுவார்கள். உதாரணமாக கொழும்பு மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் 110 பேரில் 66 பேர் வாக்காளர்கள் தொகுதிகளில் அளித்த வாக்குகளின் அடிப்படையிலும் மிகுதி 44 பேரும் மாநகர எல்லைக்கு உட்பட்ட தொகுதிகளில் வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளித்த மொத்த வாக்குகளின் அடிப்படையிலான விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். விகிதாசார அடிப்படையில் குறித்த கட்சிகளுக்கு கிடைக்கும் ஆசனங்களுக்கான அங்கத்தவர்கள் அந்தந்த கட்சிகளின் செயலாளர்களினால் நியமிக்கப்படுவர். தொகுதி அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறுவதால் மக்களுக்கு மிகவும் நெருக்கமான அரசியல் அலகொன்று உருவாவதற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளது. அதன்படி, இனி உறுப்பினர்கள் இல்லாத தொகுதி என எதுவும் இல்லாத அதேவேளை மீண்டும் ஒரு தடவை மக்களுடைய வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் தமது கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டிய ஒரு அழுத்தம் அரசியல் பிரதிநிதிகளுக்கு ஏற்படுகின்றது. இதேவேளை, உறுப்பினர்களின் செயற்பாடுகளை மிகவும் நெருக்கமாக கண்காணிப்பதற்கான வாய்ப்பு வாக்காளர்களுக்குக் கிட்டியுள்ளது. எளிமையான வாக்குச்சீட்டு கடந்த கால தேர்தல்களைப் போல் அல்லாது இம்முறை தேர்தலுக்கான வாக்குச்சீட்டு மிகவும் எளிமையாக அமையவுள்ளது. இந்த வாக்குச் சீட்டில் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்களுடைய பெயர்கள் மற்றும் சின்னங்களும் அவற்றுக்கு எதிரே புள்ளடி இடுவதற்கான கட்டமும் காணப்படும். வாக்காளர்கள் தாங்கள் தெரிவு செய்யவுள்ள அரசியல் கட்சிக்கு, அல்லது சுயேட்சைக்குழுவிற்கு எதிரே புள்ளடியிடுவதன் மூலம் வாக்களிக்க முடியும். சுருக்கமாக கூறுவதென்றால் வாக்குச் சீட்டில் ஒரே ஒரு புள்ளடி மட்டுமே இடவேண்டும். முன்னர் மூன்று வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை அளிப்பதற்கு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம் இம்முறை தேர்தலில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களின் பிரதிநிதித்துவம் இந்த தேர்தலில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது உள்ளூராட்சி சபைகளில் ஆகக்குறைந்தது 25% ஆன பெண்கள் அங்கத்துவம் பெறும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி புதிய முறையின்படி உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஆகக்குறைந்தது 1900 பெண்கள் தெரிவுசெய்யப்படவுள்ளமை விசேட அம்சமாகும். இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் மொத்தமாக 86 பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உள்ளூராட்சி மன்றத்தின் தலைவரைத் தெரிவு செய்தல் பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றுகின்ற கட்சியின் செயலாளர் அல்லது சுயேட்சைக் குழுவாயின் அதன் தலைவர் குறித்த உள்ளூராட்சி சபையின் தலைவரை தெரிவு செய்யவேண்டும். அவ்வாறு இல்லையெனில், அச்செயற்பாடு உள்ளூராட்சி சபை ஆணையாளர் மூலமாகக் கூட்டப்படுகின்ற முதற்கூட்டத்திலே இடம்பெறும். அப்பதவிக்காக முன் வருகின்ற உறுப்பினர்களிடையில் அதிக விருப்பினைப் பெற்றுக்கொள்கின்ற உறுப்பினர் குறிப்பிட்ட பதவிக்கு நியமிக்கப்படுவார்.