by Bella Dalima 08-02-2018 | 4:33 PM
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஷியாவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கலிதா ஷியாவின் ஆட்சிக்காலத்தின் போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல இலட்சம் அமெரிக்க டொலர்கள் நன்கொடை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கலிதா ஷியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு டாக்காவில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கலிதா ஷியா சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், மறு விசாரணைக்கு உத்தரவிட முகாந்திரம் இல்லை என்று கூறிய உயர் நீதிமன்றம், கலிதா ஷியாவின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஷியா அனாதை இல்ல அறக்கட்டளைக்கு முறைகேடாக 2.5 இலட்சம் டொலர்கள் நன்கொடையாகப் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது, கலிதா ஷியா (வயது 72) மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கலிதா ஷியாவின் மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.