கைகொடுக்குமா காலை வாருமா மிர்பூர்?

கைகொடுக்குமா காலை வாருமா மிர்பூர்?

by Staff Writer 08-02-2018 | 2:56 PM
COLOMBO (Newsfirst) - சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தோல்விகளால் துவண்டு போயிருந்த இலங்கை அணிக்கு மீண்டெழ கிடைத்த ஒரு வாய்ப்பாகவே பங்களாதேஷூக்கான விஜயம் அமைந்துள்ளது. அதற்கேற்றவாறு பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சாம்பியனாகி ஆறுதலடைந்தது. என்றாலும், பங்களா​தேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இலங்கை அணியின் திறமையை பரிசீலிக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் பிரகாசித்தாலும் அதனையும் விஞ்சி திறமையை வௌிப்படுத்திய இலங்கை அணி போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது. இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தாலும் இலங்கை அணியின் ஆதிக்கமே மேலோங்கிக் காணப்பட்டது என்பதே உண்மை. ஏனெனில், இலங்கையின் மூன்று வீரர்கள் சதமடிக்க, மேலும் இருவர் அரைச்சதமடித்து திறமையை நிரூபித்தனர். இவர்கள் அனைவரும் பெரிய அளவில் அனுபவமில்லாதவர்கள் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இவ்வாறான நிலையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் ஷெஹார் பங்ளா மைதானத்தில் இன்று(08/0218) ஆரம்பமானது. போட்டியின் ஆரம்பம் என்னவோ பங்களாதேஷூக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஆனாலும், வெற்றி யாருக்கு கிட்டும் என்பதை இப்போதைக்கு அனுமானிக்க முடியாது. போட்டி நடைபெறும் ஷெஹார் பங்ளா மைதானத்தின் வரலாறு அதனையே எடுத்தியம்புகிறது. இந்த ஆடுகளம் இலங்கைக்கும், பங்களாதேஷூக்கும் சமமான பலாபலன்களையே கடந்த காலத்தில் கொடுத்துவந்துள்ளது. குறிப்பாக இலங்கை அணி இந்த மைதானத்தில் பங்களாதேஷை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சந்தித்து அந்த இரண்டிலுமே வெற்றிபெற்றுள்ளது. தவிர பங்களாதேஷூக்கு எதிரான அதிகபட்ச எண்ணிக்கையான 6 விக்கெட் இழப்புக்கு 730 ஓட்டங்களை 2014 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலேயே இலங்கை பெற்றுள்ளது. அத்துடன், இந்த மைதானத்தில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 293 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ள இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸில் 405 ஓட்டங்களைக் குவித்து போட்டியை 107 ஓட்டங்களால் வெற்றிகொண்டும் உள்ளது. இதனால் இந்த மைதானம் இலங்கை அணிக்கு நன்கு பரிச்சயமானதாகவே தென்படுகின்றது. அந்த வகையில் இந்த மைதானத்தில் இலங்கை அணியை தோற்கடிக்க பங்களாதேஷ் கடும் பிரயத்தனம் எடுக்க வேண்டி ஏற்படலாம். மறுபுறம் ஷெஹார் பங்ளா மைதானத்தில் பங்களாதேஷ் அணியின் ஆற்றல்களைப் பார்ப்போமானால் இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவற்றில் மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ளது. மூன்று போட்டிகளை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டுள்ளது. கிரிக்கெட்டை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்திய இரண்டு ஜாம்பவான்களான இங்கிலாந்தும், அவுஸ்திரேலியாவும் பங்களாதேஷிடம் மண்டியிட்டது இந்த மைதானத்தில் தான் என்பது கவனத்திற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். அதுவும் இந்த மைதானத்தில் பங்களாதேஷ் இறுதியாக விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மற்றுமோர் முக்கிய அம்சமாகும். அதாவது இலங்கையுடன் தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்த ஷெஹார் பங்ளா மைதானத்தில் கடந்த ஆண்டு இங்கிலாந்தையும், 2016 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவையும் எதிர்கொண்டுள்ள பங்களாதேஷ் அவற்றில் வெற்றியீட்டியுமுள்ளது. அதேபோன்று இந்த மைதானத்தில் பங்களாதேஷ் வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டு நியூஸிலாந்துக்கு எதிரானதாகும். எஞ்சிய ஒரு போட்டி பலம் வாய்ந்த தென்ஆபிரிக்காவுடன் இடம்பெற்றுள்ளது. ஆக ஷெஹார் பங்ளா மைதானத்தின் சமீபத்தைய பெறுபேறுகள் பங்களாதேஷ் அணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. அவ்வாறே இலங்கை பெற்ற வெற்றிகள் யாவும் முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார, மஹெல ஜயவர்தன போன்ற நட்ச்சத்திர வீரர்கள் விளையாடிய காலத்தில் ஈட்டப்பட்டவையாகும். டெஸ்ட் அரங்கில் மூன்று வருடங்களின் பின்னரே இந்த மைதானத்தில் இலங்கை அணி களமிறங்கியுள்ளது என்பதுடன் பெரும்பலானவர்கள் புதுமுக வீரர்களாவர். அணித்தலைவர் தினேஷ் சந்திமால், ரங்கன ஹேரத், திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால், டில்ருவன் பெரேரா ஆகியோருக்கு மாத்திரமே இந்த ஆடுகளத்தில் டெஸ்ட் விளையாடிய அனுபவம் உள்ளது. பங்களாதேஷை பொறுத்தமட்டில் அனுபவம் வாய்ந்த பெரும்பாலான வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் பங்களாதேஷ் அணிக்கே பெரும்பான்மையாக உள்ளது. எனவே, இலங்கைக்கு எதிராக இந்த மைதானத்தில் முதலாவது டெஸ்ட் வெற்றியை ஈட்ட பங்களாதேஷ் கடுமையாக முயற்சிக்கும் என நம்பலாம். ஆனாலும், மைதானத்தின் பெறுபேறுகள் இரண்டு அணிகளுக்குமே சமமானதாக இருப்பதால் யாருக்கு கைகொடுக்கும், யாரை காலைவாரிவிடும் என்பதை இப்போதைக்கு உறுதிபட கூற முடியாது. ஆர்.திருஷான்னோ