அடிபணியாத அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும்

பதவிகளுக்கு அடிபணியாத அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும்: சி.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தல்

by Bella Dalima 07-02-2018 | 6:56 PM
சலுகைகள், பதவிகளுக்கு அடிபணியாத அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அறிக்கை ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார். பலவீனமாகவுள்ள தமிழ் தலைமைகளின் செயற்பாட்டினால் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளும் அபிலாஷைகளும் தூர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு உறுதியுடன் செயற்பட வேண்டிய காலகட்டம் இதுவென வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். தூரநோக்குடன் செயற்படக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும் என்பதுடன், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் அறிக்கையில் தௌிவுபடுத்தியுள்ளார். ஒரு சில தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தமிழ் மக்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படக்கூடாது எனவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். திடமான கோரிக்கையை முன்வைத்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளாமல், அரசாங்கத்துடன் இணைந்து அரசியலமைப்பு மாற்றத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கொண்டு சென்றதன் மூலம் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசமயப்படுத்தப்பட்டிருந்த தமிழ் மக்களின் பிரச்சினை, தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் இலங்கைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வலுவிழந்தமைக்கான காரணம் இதன் வெளிப்பாடெனவும் அவர் தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கையில் ஆக்கப்பூர்வமான எந்த முன்மொழிவும் தமிழ் கட்சிகளினால் ஆணித்தரமாக முன்வைக்கப்படவில்லை எனவும் சி.வி விக்னேஷ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக எதற்காகப் போராடினார்களோ, அவற்றை முற்றாக மறுதலிக்கும் வகையில் இடைக்கால அறிக்கை அமைந்துள்ளதாகவும் முதலமைச்சர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.