நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பணிப்பகிஷ்கரிப்பு

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 05-02-2018 | 2:40 PM
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 25 வீத சம்பள கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்ததாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்னாயக்க குறிப்பிட்டள்ளார். துறைசார் அமைச்சருடன் நேற்று அவசர கலந்துரையாடலொன்று நடத்தப்பட்ட போதும் தங்களின் கோரிக்கைக்கு அமைச்சர் தீர்வு வழங்கவில்லை எனவும் உபாலி ரத்னாயக்க கூறினார். இன்று காலை ஒன்பது மணி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சில பகுதிகளில் பாவனையாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது, அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது 23 வீத சம்பள அதிகரிப்பிற்கு இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த வியடம் குறித்து தொழிற்சங்கங்களுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.