சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை

ஒழுக்கமாக நடந்து கொள்ளுமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை

by Staff Writer 05-02-2018 | 7:44 PM
மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது. நாளைய விவாதத்தைத் தொடர்ந்து பெப்ரவரி 21 ஆம் 22 ஆம் திகதிகளில் இந்த அறிக்கைகள் தொடர்பிலான விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 34 பாரிய ஊழல் மோசடி அறிக்கைகளுடன் தொடர்புடைய சுமார் ஏழாயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்களை இறுவட்டுக்களில் பதிவேற்றம் செய்து நாளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முறிகள் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கான இயலுமை தொடர்பிலும் சபாநாயகர் கவனம் செலுத்தியுள்ளார். ரிச்சட் டி சொய்ஸா வழக்கு நடைபெற்ற காலப் பகுதியில் அது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அப்போதைய சபாநாயகர் வழங்கிய தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு இந்த விவாதத்தை நடத்துவதில் தடையேதும் இல்லை என்பதே சபாநாயகரின் நிலைப்பாடாகும். இந்த விவாதம் தொடர்பில் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளதால் மிகவும் பொறுப்புடன் விவாதத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து தரப்பினரிடமும் சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட விரும்பத்தகாத சூழல் மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் சபாநாயகரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.