அர்ஜுன் அலோசியஸின் விளக்கமறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 05-02-2018 | 9:50 AM
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. எதிர்வரும் 16ஆம் திகதி வரை அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் இன்று காலை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று காலை கைது செய்யப்பட்ட அவர்கள் கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் நேற்றிரவு ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது இன்று வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பிலான விசாரணை குறித்து கடந்த வௌ்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ,அர்ஜுன் அலோசியஸ். கசுன் பாலிசேன, அர்ஜுன் மகேந்திரன் ஆகியோரை சந்தேகநபர்களாக அறிவித்தது. வெளிநாட்டில் வசிப்பதாக தெரிவிக்கப்படும் அர்ஜுன் மகேந்திரன் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என கடந்த வௌ்ளிக்கிழமை நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.