70ஆவது சுதந்திர தினம் இன்று

70 ஆவது சுதந்திர தினத்தினை இலங்கை இன்று கொண்டாடுகின்றது

by Staff Writer 04-02-2018 | 7:10 AM
70 ஆவது சுதந்திர தினத்தினை இலங்கை இன்று கொண்டாடுகின்றது. ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை எட்டு மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. "ஒரே நோக்கு" என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திரத் தினம் கொண்டாடப்படுகின்றது. சுதந்திர தின நிகழ்வின் விசேட விருந்தினராக பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் எட்வட் மற்றும் அவரின் மணைவி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது கலாசார பவனியும் இடம்பெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்படவுள்ளது. சுதந்திர தினத்தினை முன்னிட்டு கொழும்பு நகரத்தில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 வரை காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையிலான வீதி மூடப்படுவதுடன் சைத்திய வீதியும் இந்த காலப்பகுதியல் மூடப்பட்டிருக்கும். இதேவேளை, காலை 7 மணி முதல் நண்பகல் 12 வரை கொள்ளுப்பிட்டி சந்தியின் புனித மைக்கேல் சுற்றுவட்டத்தினூடாக காலி வீதிக்கு நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. செரமிக் சந்தயினூடாக பழைய பாராளுமன்றத்தில் வீதிக்கும், வங்கி வீதிக்கும் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்திலிருந்து, கோட்டை சீ.டீ.ஓ பகுதிக்கு பிரவேசித்தல் மற்றும் கோட்டையிலிருந்து செரமிக் சந்திக்குள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை எட்டு மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் காமினி சுற்றுவட்டத்தினூடாக டீ.ஆர்.விஜயவர்தன வீதியூடாக பிரவேசித்தல் மற்றும் கொம்பனி வீதியூடாக பொலிஸ் சுற்றுவட்டம் சென்று ரீகல் சந்தியை சென்றடைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மூடப்பட்டிருக்கும் வீதிகளை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 70 ஆவது சுதந்திரக கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரதின கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்