பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிருக்கு எதிராக வழக்கு

பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவிற்கு எதிராக நிதிக்குற்றச்சாட்டு வழக்குத் தாக்கல்

by Staff Writer 03-02-2018 | 8:51 PM
பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவிற்கு எதிராக நிதிக்குற்றச்சாட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடுவலை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி தெரிவித்தார். இந்த வழக்கின் ஆரம்ப விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது அமெரிக்காவில் வாழ்பவரான அஞ்சலா கிறிஸ்டின் மயில்வாகனம் என்பவர் தனது சட்டத்தரணியூடாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அமெரிக்கவாழ் பிரஜையான குறித்த முறைப்பாட்டாளர், பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தன்னிடம் 150,000 அமெரிக்க டொலர்களை 2006 ஆம் ஆண்டு கடனாகக் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதில் 75,981 அமெரிக்க டொலர்களை அவர் திருப்பிச் செலுத்தவில்லை எனவும் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். எனவே, தனக்கு வழங்க வேண்டிய மிகுதிப் பணம், வழக்குச் செலவு மற்றும் பணத்திற்கான 10 வீத வட்டி என்பவற்றையும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா திருப்பிச் செலுத்த வேண்டும் என முறைப்பாட்டாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அஞ்சலா கிறிஸ்டின் மயில்வாகனத்திடம் நிதி மோசடி செய்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவைத் தொடர்புகொள்ள பல தடவைகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.