நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆராய குழு

நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆராய குழு

By Sujithra Chandrasekara

Feb 14, 2018 | 7:08 am

நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆராய்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – 07 இல் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நேற்றிரவு நடைபெற்றது.

அமைச்சர்களான, கபீர் ஹாசீம், சரத் பொன்சேகா, ரிசாட் பதியூர்தீன், ஹரின் பெர்ணான்டோ , சாகல ரத்னாயக்க உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

நாட்டில் தற்போது அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் , ஐக்கிய அமெரிக்க குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை சந்தித்து நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தனி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான இணக்கப்பாடு அலரிமாளிகையில் நேற்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.