ஐ.ம.சு. முன்னணியின் பாமன்கடை மேற்கு வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷின் கார் மீது தாக்குதல்

ஐ.ம.சு. முன்னணியின் பாமன்கடை மேற்கு வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷின் கார் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2018 | 3:48 pm

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் பாமன்கடை மேற்கு வேட்பாளர், உமாச்சந்திரா பிரகாஷின் கார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வௌ்ளவத்தை – பெரேரா வீதியில் அமைந்துள்ள வேட்பாளரின் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

நேற்றிரவு 11.30 அளவில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பில் 1 1 9 என்ற பொலிஸ் அவசர அழைப்பிற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்றிரவு வௌ்ளவத்தை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் குறிப்பிட்டார்.

இன்று காலை தமக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக வௌ்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.

தமது தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தமது வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும் என வேட்பாளர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்தை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, தமது வாகனத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் பாமன்கடை மேற்கு வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் நியூஸ்பெஸ்ட்டிற்குக் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்