வௌிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன?

வௌிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன?

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2018 | 7:22 pm

வௌிநாட்டு முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டு வர அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் பிரகாரம், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அண்மையில் வர்த்தக சந்திப்பு ஒன்றில் ஆற்றிய உரை மீது சிலோன் டுடே பத்திரிகை அவதானம் செலுத்தியுள்ளது.

அந்த சந்திப்பு இந்தோனேசியாவின் வர்த்தகர் ஒருவருடனானது என அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தனியார் பிரிவினரால் சுமக்கப்படும் ஏற்றுமதி மற்றும் நேரடி வௌிநாட்டு முதலீடுகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தி இலக்கினை நோக்கி பயணிப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்ததாக சிலோன் டுடே செய்தி வௌியிட்டுள்ளது.

அந்த இலக்கினை இலகுபடுத்துவதற்காக கடந்த மூன்று வருடங்களில் சில விதிமுறைகளை மாற்ற வேண்டி ஏற்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தின் 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பில் அமைச்சர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திருத்தத்தின் விபரீதங்கள் தொடர்பில் சிவில் சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என நியூஸ்பெஸ்ட் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த திருத்தம் நிதி தூய்தாக்கலுடன் பிணைந்துள்ளதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திருத்தம் தொடர்பில் சர்வதேச அமைப்புகளும் கவனம் செலுத்தியதுடன், நிதி தூய்தாக்கல் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டது.

அந்த நாடுகள் நிதி தூய்தாக்கல், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குதல் மற்றும் சர்வதேச நிதி கட்டமைப்பிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டது.

அந்த 11 நாடுகளில் பொஸ்னியா, ஹர்சகோவினா, வட கொரியா,எத்தியோப்பியா, ஈரான், ஈராக், சிரியா, ரியுனிசியா, வனாட்டு மற்றும் ஏமன் ஆகிய நாடுகளும் உள்ளடங்குகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்