தஜூடீன் கொலையுண்ட தினத்தில் சம்பவ இடத்திற்குப் பயணித்த மஹிந்த ராஜபக்‌ஸவின் உறவினர்

தஜூடீன் கொலையுண்ட தினத்தில் சம்பவ இடத்திற்குப் பயணித்த மஹிந்த ராஜபக்‌ஸவின் உறவினர்

தஜூடீன் கொலையுண்ட தினத்தில் சம்பவ இடத்திற்குப் பயணித்த மஹிந்த ராஜபக்‌ஸவின் உறவினர்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2018 | 8:38 pm

ரக்பி வீரர் வசீம் தஜூடீனின் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவு வைத்திருந்த சிலரிடம் வாக்குமூலம் பெற்று, விசாரணைகளை முன்னெடுப்பது அவசியம் என பிரதி சொலிசிட்டர் நாயகம் டிலான் ரத்நாயக்க, கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா விமலசிறிக்கு இன்று அறிவித்தார்.

கொலை இடம்பெற்ற தினம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறவினர் ஒருவர் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான இரண்டு வாகனங்களில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பயணித்திருந்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் டிலான் ரத்நாயக்க நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அந்த இரண்டு வாகனங்களிலும் கடற்படை உத்தியோகத்தர்கள் இருவர் பயணித்ததாக தகவல் பதிவாகியுள்ளதுடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் டிலான் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இந்த விசாரணைகளை நிறைவு செய்ய சிறிது காலம் செல்லும் என்பதால், 6 மாதங்களின் பின்னர் வழக்கு விசாரணையை மீள முன்னெடுக்குமாறு பிரதி சொலிசிட்டர் நாயகம் விடுத்த வேண்டுகோளைக் கருத்திற்கொண்ட மேலதிக நீதவான், எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த கொலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்குத் தேவையான வாக்குமூலத்தை இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கொழும்பு முன்னாள் பிரதம சட்ட வைத்தியர் போராசிரியர் ஆனந்த சமரக்கோன், இரண்டு வாரங்களுக்குள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் வழங்க வேண்டும் என நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

2012 ஆம் ஆண்டு மே மாதம் நாராஹேன்பிட்டி பிரதேசத்தில் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, ரக்பி வீரர் வசீம் தஜூடீன் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இது திடீர் விபத்தினால் ஏற்பட்ட மரணம் என தகவல் வெளியான போதிலும், பின்னர் மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வௌிக்கொணர்ந்தனர்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் சுமித் தம்மிக்க பெரேரா மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க ஆகியோரைக் கைது செய்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்