ஊவா மாகாண சபை மோதலில் காயமடைந்த ஆறுமுகன் கணேசமூர்த்தி கைதாகி பிணையில் விடுவிப்பு

ஊவா மாகாண சபை மோதலில் காயமடைந்த ஆறுமுகன் கணேசமூர்த்தி கைதாகி பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2018 | 4:41 pm

ஊவா மாகாண சபை கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகன் கணேசமூர்த்தி கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து பணம் பெற்றுக்கொண்டதாக ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகன் கணேசமூர்த்தி மீது நான்கு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் பதுளை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, மாகாண சபை உறுப்பினர் மீதான நான்கு குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகன் கணேசமூர்த்தி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, ஊவா மாகாண சபை கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆறு பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகன் கணேசமூர்த்தியுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, மாகாண சபைக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்