இலங்கைக்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையில் 2 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

இலங்கைக்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையில் 2 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

இலங்கைக்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையில் 2 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2018 | 3:18 pm

இலங்கைக்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தோனிஷிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ (Joko Widodo) மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நீண்ட நேர கலந்துரையாடலொன்று நேற்று (24) நடைபெற்றது.

பொருளாதார உதவிகளை வலுப்படுத்துதல், தனியார் மற்றும் நிறுவன திறன்களை விருத்தி செய்தல், இந்தோனேஷியாவின் இலங்கைக்கான உதவிகளை மேலும் விருத்தி செய்தல் போன்ற காரணிகள் குறித்து உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ உபகரண உற்பத்தி, ரயில்வே துறையை அபிவிருத்தி செய்தல் மற்றும் கல்வித்துறையில் அபிவிருத்திகளை மேற்கொள்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதற்கான நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இந்தோனேஷிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ (Joko Widodo) இதன்போது தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நீண்டகால யுத்தம் காரணமாக பிராந்திய நாடுகளுக்குள் பொருளாதாரத்தில் இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அதனை சீர் செய்வதற்கு சர்வதேசத்தின் உத்திகள் அவசியம் எனவும் இரா.சம்பந்தன் இதன்போது எடுத்துக்கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்தோனேஷிய அரசாங்கம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தோனேஷிய ஜனாதிபதியிடம் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய பிரச்சினை காரணமாக 50 வீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் நாட்டிலிருந்து சர்வதேச நாடுகளுக்கு புலம்பெயர்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இரா.சம்பந்தன், அவர்களின் அநேகமானவர்கள் புத்திஜீவிகள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையிலுள்ள வளங்களை அபிவிருத்தி செய்து, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமது நாடு அனைத்து சந்தர்ப்பங்களிலும் உதவிகளை நல்கும் என இதன்போது இந்தோனேஷிய ஜனாதிபதி உறுதி வழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்