கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக குற்றவியல் வழக்குத்தாக்கல் செய்யுமாறு பரிந்துரை

கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக குற்றவியல் வழக்குத்தாக்கல் செய்யுமாறு பரிந்துரை

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2018 | 9:28 pm

அவன்ற் கார்ட் மற்றும் ரக்னா லங்கா நிறுவனங்கள் தொடர்பிலான கொடுக்கல் வாங்கல் குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி ஆகியோர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக குற்றவியல் வழக்குத்தாக்கல் செய்யுமாறு பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த 13 பேரில் அரச நிறுவனங்களில் சேவையாற்றியோர் மீண்டும் எந்தவொரு அரச நிறுவனங்களிலும் பதவிகளை வகிக்கத் தகுதியற்றவர்கள் எனவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவியல் வழக்குத்தாக்கல் செய்யத் தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க சட்ட மா அதிபர் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக் குறிப்புகளை அனுப்புமாறும் ஜனாதிபதி ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி, ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெல ஆகியோருக்கு எதிராகவே வழக்குத்தாக்கல் செய்ய முடியும்.

இதற்கு மேலதிகமாக ரோஹனவீர டி சொய்சா, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, முன்னாள் நகர சபைத் தலைவர்களான தனசிறி அமரதுங்க, ஜனக்க ரணவக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார, ஜயந்த பெரேரா மற்றும் ஜயநாத் கொலம்பகே ஆகியோருக்கு எதிராகவும் குற்றவியல் வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவன்ற் கார்ட் நிறுவனம், ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்துடன் பல்வேறு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டு, கடற்படையினர் வர்த்தகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைக்கான வசதிகளை வழங்கி அரசாங்கத்திற்கு ஈட்டிக்கொடுத்த பெருமளவு வருமானத்தை இழக்கச்செய்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரச நிறுவனமான ரக்னா லங்கா நிறுவனத்திற்கு தம்முடன் நெருங்கியவர்களை நியமித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரமற்ற 3,473 தன்னியக்க துப்பாக்கிகள் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் வசமிருந்ததாக ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ, பாலித்த பெர்னாண்டோவிற்கு வழங்கிய ”விற்பனை செய்வது அல்லது பொறுப்பளிப்பது” தொடர்பிலான அனுமதி மாத்திரமே இந்த துப்பாக்கிகளுக்காக இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன மற்றும் பாலித்த பெர்னாண்டோ ஆகியோர் இந்த ஆயுதங்கள் தொடர்பில் அவ்வப்போது கடிதங்களை வௌியிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனம் என்ற வகையில், ரக்னா லங்கா நிறுவனம் பயன்படுத்திய இந்த ஆயுதங்களுக்காக அனுமதிப்பத்திரக் கட்டணமாக செலுத்த வேண்டிய தொகையை அறவிடுமாறும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை, அவன்ற் கார்ட் நிறுவனம் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த 17 அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சமுத்திர பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

கட்டுகுருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை பயிற்றி முகாமில் இந்த பயிற்சிகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளமை ஆணைக்குழுவில் உறுதியாகியுள்ளது.

இதற்கான அனுமதியையும் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன வழங்கியுள்ளார்.

அனுமதிப்பத்திரமற்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் நிஸங்க சேனாதிபதி மற்றும் அவன்ற் கார்ட் நிறுவனத்திற்கு துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்ய முடியும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் சமுத்திர பாதுகாப்பு உத்தியோகத்தர்களைப் பயிற்றுவிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் தமயந்தி ஜயரத்ன ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளதுடன், கோட்டாபய ராஜபக்ஸவின் வாக்குமூலங்களில் அநேகமான விடயங்கள் நிரூபனமாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஸ, நிஸங்க சேனாதிபதி மற்றும் தமயந்தி ஜயரத்ன ஆகியோருக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்றாலும் கோட்டாபய ராஜபக்ஸவின் வாக்குமூலங்கள் ஊடாகத் தெரியவந்த விடயங்கள் தொடர்பில் மேலதிக சாட்சியங்களை நிரூபிக்க வேண்டியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரக்னா லங்கா அரச நிறுவனத்தின் ஊழியர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் கே.பி. எகொடவெல, பாலித்த பெர்னாண்டோ, ரோஹன ரணவீர டி சொய்சா, தனசிறி அமரதுங்க, துமிந்த சில்வா, ஜனக்க ரணவக்க மற்றும் உபாலி கொடிகார ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின்கீழ் வழக்குத்தாக்கல் செய்ய முடியும் எனவும் ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

இவர்களது செயற்பாடுகள் காரணமாக அரசாங்கத்திற்கு 70 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்