திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன் கோரிக்கை

திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2018 | 7:16 pm

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இலங்கைக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சிங்கப்பூர் பிரதமருக்கு இரா.சம்பந்தன் தௌிவுபடுத்தியதாகவும் தற்போது மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானவையல்ல என எடுத்துக்கூறியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமித்த, பிரிக்கமுடியாத, பிளவுபடாத நாட்டிற்குள் தீர்வொன்றையே தமிழ் மக்கள் விரும்புவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சிங்கப்பூர் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என இந்த சந்திப்பின் போது இரா.சம்பந்தன் சிங்கப்பூர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இயற்கைத்துறைமுகம் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கொண்ட திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ள சிங்கப்பூர் முன்வர வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பில் தமது நாட்டு முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடுவதாக சிங்கப்பூர் பிரதமர் இதன்போது உறுதியளித்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்