சித்தார்த்தனின் பாராளுமன்ற சிறப்புரிமை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடு

சித்தார்த்தனின் பாராளுமன்ற சிறப்புரிமை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2018 | 8:17 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பாராளுமன்ற சிறப்புரிமை கொழும்பில் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தபால் உறைகளில் கொழும்பு மாநகர சபைக்கு ஜனநாயக மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பிரசாரத் துண்டுப்பிரசுரங்கள் வௌ்ளவத்தையிலுள்ள வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் வினவியபோது, குறித்த கூட்டணியுடன் தமக்கு எவ்வித அரசியல் தொடர்புகளும் இல்லை என கூறினார்.

தமது அலுவலகத்தில் இருந்த கடித உறைகளைப் பெற்றுக்கொண்ட சிலர் அவற்றை தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்துவதாக தமக்கு தகவல் கிடைத்ததென அவர் மேலும் தெரிவித்தார்.

உடனடியாக தாம் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகொண்டு குறித்த செயற்பாட்டினை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் தபால் உறைகளில் துண்டுப்பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட்டதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாமன்கடை மேற்கு வேட்பாளர் கலாநிதி ந.குமரகுருபரன் ஏற்றுக்கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற தபால் வசதிகள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தகவல் வழங்கவுள்ளதாக ஆணைக்குழுவின் முறைப்பாட்டுப் பணியகம் தெரிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்