சுற்றாடல் அனுமதிப்பத்திரமின்றி செயற்படும் நுரைச்சோலை அனல் மின் நிலையம்?

சுற்றாடல் அனுமதிப்பத்திரமின்றி செயற்படும் நுரைச்சோலை அனல் மின் நிலையம்?

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2018 | 8:07 pm

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு செல்லுபடியாகும் சுற்றாடல் அனுமதிப்பத்திரமொன்று தற்போது இல்லை என்ற விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னர் அதனை நீடிக்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமேல் மாகாண பணிப்பாளர் சமன் லெனதுவ குறிப்பிட்டார்.

மூன்று மின் பிறப்பாக்கிகள் ஊடாக நிலக்கரியைப் பயன்படுத்தி தேசிய கட்டமைப்புடன் 900 மெகாவாட்ஸ் மின்சாரத்தை இணைப்பதே நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் செயற்பாடாகும்.

இவ்வாறான மின்நிலையம் ஒன்றை செயற்படுத்துவதற்கு சுற்றாடல் அனுமதிப்பத்திரம் அத்தியாவசியம். அதனூடாகவே சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

எனினும், அந்த அனுமதிப்பத்திரம் இன்றியே நுரைச்சோலை அனல்மின் நிலையம் தற்போது இயங்கி வருகின்றது.

இந்த அனல் மின் நிலையத்தினால் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தது.

குறித்த பிரதேசத்தில் அதிகளவில் சாம்பல் படிவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதுடன், பயிர் நிலங்களும் பாதிப்பிற்குள்ளாகின்றன.

இந்த பிரச்சினைக்குத் தீர்வாக நுரைச்சோலை மின் நிலையத்தின் மின்காந்தத் தூண்டல் பகுதியை விரிவுபடுத்துவதற்கான யோசனை அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மின் நிலையத்தின் அனைத்து பொறியியலாளர்களின் கையொப்பத்துடன் கடந்த வருடம் ஜூன் மாதம் 26 ஆம் திகதி மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் இதன் பாரதூரம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் செயற்படுத்தப்படும்போது நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் தொன் மென்மையான சாம்பல் வெளியாவதாக அதில் கூறப்பட்டிருந்தது.

நிலக்கரியை எரிப்பதால் வௌியாகும் சாம்பலின் தரத்திற்கேற்ப, அவை சீமெந்து உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டபோதிலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து வௌியேற்றப்படும் சாம்பல் அதற்கு தகுந்ததாக இல்லை என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் ஆசனிக் போன்ற விஷ இரசாயனம் அடங்கிய இந்த சாம்பல் அதிகளவில் மின் நிலைய வளாகத்தில் குவிக்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள் பாரியளவிலான சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

தூசு மற்றும் சாம்பல் காரணமாக ஏற்படும் அசௌகரியத்தினைக் குறைப்பதற்காக நிபுணர்களின் ஒத்துழைப்புடன் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு முன்வைத்த யோசனை இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சூழல் பிரச்சினைகளுக்கு அப்பால் இந்த மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று செயலிழந்துள்ளது.

இந்த மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நாற்பதுக்கும் அதிகத் தடவைகள் இந்த மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளது.

அனல் மின் நிலையங்களின் ஊடாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்ற இந்தத் தருணத்தில் மற்றுமொரு மின் நிலையத்தினை சம்பூர் பகுதியில் நிர்மாணிப்பதற்கான யோசனை அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

நியூஸ்பெஸ்ட் இது தொடர்பில் தொடர்ந்தும் செய்தி வௌியிட்டு வந்ததுடன், சுற்றாடல் அமைப்புக்கள் உள்ளிட்ட சிவில் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பிற்கு மத்தியல் அத்திட்டம் கைவிடப்பட்டது.

அதன் பின்னர் அனல் மின் நிலையத்திற்குப் பதிலாக இயற்கை வாயு அல்லது எல்.என்.ஜி போன்ற சுற்றாடலுக்கு குறைவான பாதிப்பினை ஏற்படுத்தும் மின் நிலையங்களை அறிமுகப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது.

எனினும், அந்தக் கொள்கைக்குப் பதிலாக திருகோணமலை மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் இரண்டு அனல் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு மீண்டும் அமைச்சரவையில் பத்திரமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, சரத் அமுனுகம முன்வைத்த பிரேரணை ஜனாதிபதியின் தலையீட்டினால் நிராகரிக்கப்பட்டபோதிலும் நிலக்கரியை பிரபல்யப்படுத்துவதற்கு சிலர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Clean Coal என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டபோதிலும், இந்த தொழில்நுட்ப முறை இன்னமும் பரீட்சார்த்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தற்போது நிலக்கரி பயன்பாட்டை கைவிட்ட வண்ணமுள்ள நிலையில், அவர்கள் கைவிட்ட மின் நிலையங்களை எம்மைப் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிப்பதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போதைய ஜனாதிபதியின் கீழே சுற்றாடல் அமைச்சு உள்ளது.

உலகின் காலநிலை மாற்றம் தொடர்பில் பாரிஸ் நகரில் கூடி கலந்துரையாடிய உலகத்தலைவர்கள் ஏற்படுத்திய கோப் – 21 என்ற இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் ஜனாதிபதி பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அரச தலைவரின் கொள்கையை மீறி பல்வேறு யோசனைகளைக் கொண்டு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நோக்கம் இலாபத்தை இலக்காகக் கொண்டதாக அமையலாம் அல்லவா?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்