தமிழ் தேசியப் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

தமிழ் தேசியப் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

தமிழ் தேசியப் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2018 | 7:15 pm

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ் தேசியப் பேரவை தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிட்டுள்ளது.

தமிழ் தேசியப் பேரவையானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமவுரிமை இயக்கம், நம்பிகள் நல்வாழ்வுக் கழகம், தமிழர் வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொது அமைப்புக்களின் கூட்டாக இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலங்கையின் வடக்கு, கிழக்கில் சந்திக்கின்றது.

தமது முன்மொழிவுகள் “தூய கரங்கள் – தூய நகரங்கள் மற்றும் தூய கிராமங்கள்” என்ற தொனிப்பொருளை முன்னிறுத்தியதாக அமைந்துள்ளதாக தமிழ் தேசியப் பேரவை குறிப்பிட்டுள்ளது.

பொருத்தமான நடவடிக்கைகளின் மூலம் உலகின் முன்னேற்றமடைந்த நகரங்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டும் மத்திய மாகாண அரசுகளின் ஒத்துழைப்புடனும் புலம்பெயர்ந்துள்ள உறவுகளின் உதவியுடனும் பிரதேசத்தின் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவுள்ளதாகவும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கவுள்ளதாகவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசியப் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில விடயங்கள்

● வருடம் முழுவதும் 24 மணிநேரமும் செயற்படக்கூடிய மக்கள் குறை கேள் நிலையம் ஒன்று நவீன தொடர்பாடல்
வசதிகளுடன் ஏற்படுத்தப்படும்.

● சபை ஊழியர்களின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விடுமுறை நாட்கள் உள்ளடங்கலாக அனைத்து நாட்களிலும் திண்மக் கழிவகற்றல் நடைமுறை அமுல்படுத்தப்படும்.

● குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அனைத்து பிரதேசங்களிலும் நீர் விநியோக வழி முறைகள் அமுல்படுத்தப்படுவதோடு, மழைநீர் சேகரிப்புத் திட்டமும் விரிவாக முன்னெடுக்கப்படும்.

● போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புதிய நவீன வாகனத் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும்

● நடைபாதைக் கடைகள் விடயத்தில் பொதுக்கொள்கை வகுக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதன் மூலம் உள்ளூர் ஏழை மக்களின் தொழில் முயற்சிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்

● மாநகர சபை எல்லைக்குள் காணப்படும் குளங்கள் யாவும் உரிய முறையில் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதோடு குளங்களை சுற்றி நடைபாதைகள் மற்றும் ஓய்விடம் என்பன அமைக்கப்படும்.

● மயானங்கள் யாவும் சுகாதாரத்தைப் பேணும் வகையில் அபிவிருத்தி செய்யப்படுவதோடு சமூக அபிவிருத்தி மன்றங்கள் அனைத்தும் புதியவைகள் உள்ளடங்கலாகக் கட்டியெழுப்பப்படும்

● தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை அடைவதை இலக்காகக் கொண்டு செயற்படுவதோடு, தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பதான ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிராகரிக்கப்படும்.

● அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலை வலியுறுத்தப்படும்.

● காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இராணுவ வெளியேற்றம் என்பவை கோரப்படும்.

● மீனவர் பிரச்சினையைத் தீர்க்க அர்பணிப்புடன் செயலாற்றப்படும்.

● தியாகிகளின் நினைவிடங்கள் பாதுகாக்கப்படும், கட்டியெழுப்பப்படும்.

என்பன தமிழ் மக்கள் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்