தமிழகத்தில் மன அழுத்தங்களுடன் வாழும் இலங்கை அகதிகள்: தற்கொலைகளும் அதிகரிப்பு

தமிழகத்தில் மன அழுத்தங்களுடன் வாழும் இலங்கை அகதிகள்: தற்கொலைகளும் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2018 | 7:34 pm

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.

இவர்களில், 61,845 பேர் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களிலுள்ள 107 முகாம்களில் தங்கியுள்ளதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பொருளாளர் எஸ்.சி. சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மாத்திரமே இலங்கை அகதிகளுக்கான முகாம்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளில் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் ஈழ அகதிகள் மறுவாழ்வு மையம் கவனம் செலுத்தியுள்ளது.

அகதி முகாம்களில் அதிகளவிலான தற்கொலைகள் இடம்பெறுவதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பிரதான வைத்திய அதிகாரி எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

அவ்வாறான தற்கொலைகளைத் தடுப்பதற்காக முகாம்களிலுள்ள மக்களுக்கு ஆரம்ப ஆற்றுப்படுத்தல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முகாம்களில் மக்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என எஸ்.சி. சந்திரஹாசன் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருடத்தின் இறுதி வரை 2,573 குடும்பங்கள் நாடு திரும்பியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 6,900 அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தமிழகத்தின் முகாம்களில் இன்னல்களை எதிர்நோக்கிய மக்கள் தாயகம் திரும்பிய போதிலும் எதிர்பார்ப்புகள் ஈடேறாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய சுமார் 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவித வசதிகளும் தமக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நாடு திரும்பிய மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

2016 ஆம் ஆண்டில் 630 பேருக்கும் 2017 ஆம் ஆண்டில் 300 பேருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் எனவும் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்