திருமங்களாயில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் ஆலய மீள் நிர்மாணத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை

திருமங்களாயில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் ஆலய மீள் நிர்மாணத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை

திருமங்களாயில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் ஆலய மீள் நிர்மாணத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2018 | 7:49 pm

திருகோணமலை – திருமங்களாய் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் ஆலயத்தின் மீள்நிர்மாண நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

அழிவடைந்த நிலையில் கடந்த வருடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் ஆலயத்தில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐந்து தமிழ் கல்வெட்டுக்கள் மற்றும் பழமைவாய்ந்த தீர்த்தக்கேணி அமைந்திருந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் மத்திய கலாசார நிதியத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அதற்கான நிதியொதுக்கீடு இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாந்த குணர்தனவிடம் நியூஸ்பெஸ்ட் இன்று வினவியது.

ஆலய மீள் நிர்மாண நடவடிக்கைகளை இந்த வருடத்தில் முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருகோணமலை – கிளிவெட்டி பிரதான வீதியிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவிலுள்ள லிங்கபுரம் காட்டுப்பகுதியில் இந்த சிவாலயம் அமைந்துள்ளது.

திருமங்களாய் சிவன் ஆலயத்தில், தொல்லியல் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் கடந்த வருடம் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, கல்வெட்டுக்கள் உள்ளிட்ட புராதன சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆய்வின்போது மற்றுமொரு பழமைவாய்ந்த தீர்த்தக்கேணியும் கடந்த வருடம் ஜூன் மாதம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள புராதன சின்னங்களை ஆவணப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை சக்தி TV மற்றும் சக்தி FM குழுவினர் இணைந்து கடந்த ஜூன் மாதம் முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், மேலதிக தொல்லியல் சின்னங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அத்தகைய பின்னணியில், குறித்த புராதன ஆலயத்தை மத்திய கலாசார நிதியத்தின் நிதி உதவியுடன் மீள் நிர்மாணம் செய்வதற்கான முயற்சியை ஊடகவியலாளர் உமா சந்திரா பிரகாஷ் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்