முல்லைத்தீவில் மீண்டும் வௌிமாவட்ட மீனவர்களின் ஆக்கிரமிப்பு

முல்லைத்தீவில் மீண்டும் வௌிமாவட்ட மீனவர்களின் ஆக்கிரமிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2018 | 7:41 pm

2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் வௌிமாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்ட போதிலும், இன்றைய தினம் வௌிமாவட்ட படகொன்று வருகை தந்துள்ளதாக முல்லைதீவு – நாயாற்று பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வௌி மாவட்ட மீனவர்களின் வருகை மற்றும் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளினால், முல்லைத்தீவு – நாயாற்று பகுதி மீனவர்கள் கடந்த பல வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இவ்வருடம் முதல் வௌி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க வருகை தர மாட்டார்கள் என அறிவிக்கப்பட்ட போதிலும், இன்றைய தினம் வௌி மாவட்ட படகொன்று வருகை தந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில், நாயாற்றுப் பகுதியில் வௌி மாவட்ட மீனவர்களால் அமைக்கப்பட்ட கொட்டில்கள் அகற்றப்படும் எனவும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் அவை அகற்றப்படாமையினால், சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

நாயாற்று பகுதி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் வி.கலிஸ்டனிடம் நாம் வினவினோம்.

இந்த வருடம் வௌி மாவட்ட மீனவர்கள் எவருக்கும் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை எனவும், அவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்