பாராளுமன்றத்தில் கைகலப்பு- பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது தாக்குதல்

பாராளுமன்றத்தில் கைகலப்பு- பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2018 | 12:39 pm

பாராளுமன்றம் இன்று கூடியபோது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரையாற்றியபோது சபையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி பிரதரின் உரைக்கு இடையூறை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தனர்.

பிரதமரின் உரை இறுதிக் கட்டத்தை எட்டியபோது, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன செங்கோலை சபையிலிருந்து எடுத்துச் செல்வதற்கு முயற்சித்ததுடன் அதனை படைக்கல சேவிதர்கள் தடுத்தனர்.

பிரதமர் தனது உரையின் இறுதியில் “யார் திருடன்?” என கோஷமெழுப்பியிருந்ததுடன் அதற்கு ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் “மகிந்த திருடன்” என பதிலளித்தனர்.

எவ்வாறாயினும் பிரதமரின் உரை நிறைவுபெற்றதன் பின்னர் சபையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிமீது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்குதல் நடத்தியுள்ளதுடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேமீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான ஹெக்டர் அப்புஹாமிமீதும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்குதல் நடத்தியதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சபையில் இன்று திடீரென மயங்கிய நிலையில் அவரை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர்.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக சபை இன்று கூட்டப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஒரு வார காலத்தில் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக இன்றைய சபை நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஒன்றிணைந்த எதர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சபையில் தொடர்ச்சியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கமீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.

பாராளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்