தேசபந்து தெய்வநாயகம் ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

தேசபந்து தெய்வநாயகம் ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

தேசபந்து தெய்வநாயகம் ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

எழுத்தாளர் Bella Dalima

06 Jan, 2018 | 9:25 pm

சைவத்திற்கும் தமிழுக்கும் அளப்பரிய பங்காற்றிய தேசபந்து தெய்வநாயகம் ஈஸ்வரன் இன்று இயற்கை எய்தினார்.

மொரிசியசிற்கான இலங்கை தூதுவராகவும் அன்னார் சேவையாற்றியுள்ளார்.

சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த தெய்வநாயகம் ஈஸ்வரன் தனது 75 ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்தார்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி இந்தியாவில் பிறந்த அன்னார், கொட்டாஞ்சேனை சென் பெனடிக்ட் கல்லூரியின் பழைய மாணவராவார்.

தமிழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த தெய்வநாயகம் ஈஸ்வரன், இலங்கையின் வர்த்தகத்துறையில் வெற்றிவாகை சூடிய வர்த்தகராக புகழ்பூத்து விளங்கினார்.

இலங்கை சின்மயா மிஷனின் தலைவராக அன்னார் பதவி வகித்த காலப்பகுதியில் ரம்பொடை ஸ்ரீ பக்த ஹனுமான் ஆலயத்தை அமைத்து 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலையையும் பிரதிஷ்டை செய்து மக்களின் ஆன்மீகப் பயணத்திற்கு வழிவகை செய்தார்.

நாட்டின் பல்வேறு ஆலயங்கள் மற்றும் மதஸ்தாபனங்களின் தலைவராக அவர் ஆற்றிய சேவை உள்நாட்டில் மாத்திரமல்லாது வெளிநாடுகளிலும் போற்றப்பட்டது.

மொனராகலை ரம்படகல்லயில் 67.5 அடி உயர சமாதி புத்தர் சிலையை அமைக்கும் பணியில் முன்னின்று செயற்பட்ட அமரர் தெய்வநாயகம் ஈஸ்வரன் மதங்களுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தவும் தன்னை அர்ப்பணித்தார்.

இலங்கை மக்களுக்கு அன்னார் ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் கடந்த வருடம் இலங்கை அரசாங்கம் தேசபந்து விருது வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமரர் தெய்வநாயகம் ஸ்வரனின் பூதவுடல் நாளை இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்