முறிகள் மோசடி: பரிந்துரைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் 

முறிகள் மோசடி: பரிந்துரைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் 

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 8:53 pm

முறிகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

முறிகள் விசாரணையின் பூரண அறிக்கை வௌியிடப்பட்ட உடனேயே, நிதிச்சபையுடன் கலந்துரையாடிபரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள வகையில், சட்ட ரீதியான கணக்காய்வு விசாரணையை நடத்துவதற்கு தகுந்த உள்நாட்டு அல்லது சர்வதேச நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல் – மோசடி தொடர்பில், உரிய நடவடிக்கை எடுத்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆணைக்குழு அறிவித்துள்ளமை தொடர்பிலும், இலங்கை மத்திய வங்கியின் அனைத்து ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டியதன் தேவை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, திறைசேரியின் செயலாளர் கலாநிதி எச்.எஸ். சமரதுங்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் உள்ளடங்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்