2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது: வடக்கு முதல்வர்

2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது: வடக்கு முதல்வர்

2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது: வடக்கு முதல்வர்

எழுத்தாளர் Bella Dalima

04 Jan, 2018 | 5:34 pm

2017ஆம் ஆண்டில் வட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒதுக்கப்பட்ட நிதியில் 614.28 மில்லியன் ரூபா மத்திய திறைசேரியினால் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண அபிவிருத்திப் பணிகளுக்காக 6013.48 மில்லியன் ரூபா கடந்த வருடம் ஒதுக்கப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதில், கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதி வரை மத்திய திறைசேரியினால் 5399.20 மில்லியன் ரூபா மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.

இது மொத்த நிதி ஒதுக்கீட்டின் 90 வீதமாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கிடைக்கப்பெற்ற நிதி, அமைச்சுக்கள் – திணைக்களங்களினூடாக நூறு வீதம் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 97 சதவிகிதம் முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டத்திற்காகவும், சுகாதாரத்துறை அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் கடந்தாண்டு 675 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

இதில், 2017 டிசம்பர் வரை 612 மில்லியன் ரூபாவே மத்திய திறைசேரியினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டு 97வீதமான முன்னேற்றம் அடையப் பெற்றுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மொத்த ஒதுக்கீட்டில் 63 மில்லியன் ரூபா மத்திய திறைசேரியினால் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் கீழ் 207.11 மில்லியன் ரூபா கடந்தாண்டு ஒதுக்கப்பட்டது.

இதில் 64 வீதமான நிதி மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 75.16 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொடுத்த பணத்தை செலவழிக்கவில்லை என குற்றஞ்சாட்டுபவர்களுக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர், உறுதியளித்தவாறு அரசாங்கம் மொத்தப் பணத்தையும் வழங்காதிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, ஏன் இந்தப் பணம் வழங்கப்படவில்லை என்பதை இவ்வாறானவர்கள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டும் எனவும் முதலமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டிற்கான நிதியில், 1050 மில்லியன் ரூபா, 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலேயே வழங்கப்பட்டதாகவும் வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்