புதிய பஸ் நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுமாறு அறிவிக்கப்படவில்லை: இணைந்த தொழிற்சங்கம்

புதிய பஸ் நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுமாறு அறிவிக்கப்படவில்லை: இணைந்த தொழிற்சங்கம்

புதிய பஸ் நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுமாறு அறிவிக்கப்படவில்லை: இணைந்த தொழிற்சங்கம்

எழுத்தாளர் Bella Dalima

03 Jan, 2018 | 9:16 pm

இன்று பகல் 2 மணியிலிருந்து வட மாகாணத்தில் மீண்டும் போக்குவரத்து சேவையை இலங்கை போக்குவரத்து சபை முன்னெடுத்துள்ளது.

வட மாகாண முதலமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாண முதலமைச்சருக்கும் இலங்கை போக்குவரத்து சபையினர் மற்றும் தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தினருக்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதேவேளை, புதிய பஸ் நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுமாறு தமக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று மூன்றாவது நாளாகவும் வவுனியாவில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, பழைய பஸ் நிலையத்தை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

பழைய பஸ் நிலையத்திலிருந்து பஸ் சேவை இடம்பெறாமையால் தாம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியிருந்தனர்.

தமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு வவுனியா வர்த்தக சங்கம் நேற்று (02) கோரிக்கை விடுத்திருந்த போதிலும் ஏனைய வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன.

இதேவேளை, வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து தனியார் பஸ் சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். டிப்போ பஸ்களும் இன்று சேவையில் ஈடுபடவில்லை.

எவ்வாறாயினும், தனியார் பஸ் சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்திலும் இன்று மூன்றாவது நாளாக வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவைகள் இடம்பெற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்