பாதிப்பை ஏற்படுத்தும் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க சில அமைச்சர்கள் முயற்சிப்பது ஏன்?

பாதிப்பை ஏற்படுத்தும் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க சில அமைச்சர்கள் முயற்சிப்பது ஏன்?

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2017 | 9:42 pm

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு டர்பைனின் பராமரிப்பிற்காக சீன நிறுவனம் ஒன்றுக்கு 263.4 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மின் உற்பத்தி நிலையத்தின் முதல் ஒப்பந்தக்காரரான ச்சைனா மெசினறி இன்ஜினியரிங் நிறுவனத்திற்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

லக்விஜய மின் உற்பத்தி நிலையம் 300 மெகாவொட் கொள்ளவனவை கொண்ட மூன்று அலகுகளை கொண்டது.

அதன் முதல் அலகு 2011 ஆம் ஆண்டும் இரண்டாம் அலகும் 2014 ஆம் ஆண்டும் நிறுவப்பட்டதுடன், இரண்டாம் ரேபைன் 15 முக்கிய கட்டமைப்புக்களை கொண்டது.

மின் உற்பத்தி நிலையத்தின் பிரதான இயந்திரங்கள் சீன தயாரிப்பு என்பதுடன் முதல் ஒப்பந்த நிறுவனமான ச்சைனா மெசினறி இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபையின் உடன்படிக்கைக்கு ஏற்ப பராமரிப்பு செயற்பாட்டிற்கு அந்த நிறுவனத்தின்
சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என டெய்லிமிரர் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவின் சிபாரிசுகளின்படி பராமரிப்பு நடவடிக்கைக்கான ஒப்பந்தம் 263.4 மில்லியன் ரூபாவிற்கு சைனா மெசினறி இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை 600 மெகாவொட் வீதம் இரண்டு அனல் மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணித்தல் உள்ளிட்ட மின்சார சேமிப்பு கொள்கைகள் அடங்கிய ஒன்றிணைந்த அமைச்சரவைப்பத்திரம் கடந்த 19 ஆம் திகதி அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு கலாநிதி சரத் அமுனுகம மற்றும் ரஞ்ஜித் சியாம்பலாப்பிட்டிய ஆகிய அமைச்சர்கள் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி ஒன்றிணைந்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முன்வைத்திருந்தனர்.

அதன்படி திருகோணமலை பவுல் முனை மற்றும் புத்தளம் நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் 600 மெகாவொட் வீதத்திலான அனல் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்காக பவுல் முனையில் 600 ஏக்கரும் நுரைச்சோலையில் 500 ஏக்கரும் தேவைப்படுவதாக அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இந்த யோசனைகள் தொடர்பில் சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதன்மூலம் சுற்றாடலுக்கு பாரிய அழிவுகள் ஏற்படும் என சுட்டிக்காட்டியிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்