ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2017 | 8:38 pm

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில் நடத்தப்பட்ட டொக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றிவாகை சூடியுள்ளார்.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் ஆதரவோடு களமிறங்கிய அவர் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன் 89013 வாக்குகளை பெற்று இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

அதாவது 50.32% வாக்குகளை அவர் பெற்றுளள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.0

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றதனையடுத்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48306 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தையும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,651 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

எனினும் வாக்கெண்ணும் பணிகளின் போது வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நுழைந்து மோதலில் ஈடுபட்டமையினால் வாக்கெண்ணும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் ஆளும் கட்சியை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கிய டிடிவி தினகரனின் இந்த வெற்றி, தமிழகத் தேர்தலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்