வீட்டுத்திட்டம்: வட மாகாண முதல்வரின் அபிவிருத்தி அதிகாரி தன்னிச்சையாக செயற்பட்டாரா?

வீட்டுத்திட்டம்: வட மாகாண முதல்வரின் அபிவிருத்தி அதிகாரி தன்னிச்சையாக செயற்பட்டாரா?

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2017 | 7:46 pm

வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காகவே அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

வவுனியா – மருக்காரம்பளை, கணேசபுரம் 40 வீட்டுத்திட்டம் பகுதியில் பாதிக்கப்பட்ட 36 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வட மாகாண சபை வளாகத்திற்கு சென்று தங்களுக்கான வீடுகளை வழங்குமாறு கோரியிருந்தனர்.

அதற்கமைய, 32 பேரினுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கான வீடமைப்புத் திட்ட கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த பகுதியில் 9 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

வீடுகள் கிடைக்காத மக்கள் டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் உதவியுடன், தகவலறியும் சட்டத்தின் படி எந்த அடிப்படையில் இந்த 9 வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டன என்ற கேள்வியை எழுப்பியிருந்தனர்.

வட மாகாண முதலமைச்சரின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், இதற்காக 12.7 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும் ஒரு வீட்டிற்கு எட்டரை இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் இதற்கு பதில் கடிதம் கிடைத்திருந்தது.

தகவலறியும் சட்டத்தின் படி கிடைத்த தகவலுக்கு அமைய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளமை தௌிவாகிறது.

2017 ஆம் ஆண்டிற்கான நிதியை இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் செலவு செய்து முடிக்க வேண்டும் என்பதால், வீடுகளை விரைவாகக் கட்டுவதற்கு இயலுமையுடைய பயனாளிகளைத் தெரிவு செய்து அவர்களுக்கு பணத்தை வழங்கியதாகவும் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு கட்டாயமாக அதிகாரிகளினால் களப்பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.

இந்த வீடமைப்புத் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட களப் பரிசோதனை அறிக்கையை, தகவலறியும் சட்டத்தின் படி கோரியிருந்த போதிலும், அது இதுவரை வழங்கப்படவில்லை.

வட மாகாண முதலமைச்சரின் அபிவிருத்தி அதிகாரி இந்த விடயத்தில் தன்னிச்சையாக செயற்பட்டதாக மக்கள் குற்றம் சுமத்தினர்.

இந்த விடயம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, பயனாளிகளின் தெரிவு தொடர்பில் தமக்கு தொடர்பு இல்லை எனவும் மாகாண சபையே பயனாளிகளைத் தெரிவு செய்து, வீடுகளை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

களப்பரிசோதனை அறிக்கை கோரப்பட்டுள்ளமை தொடர்பில் முதலமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் மக்கள் எழுப்புகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்