ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு நிரந்தர இருக்கை: நிதி சேகரிக்கும் முயற்சி இலங்கையில்

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு நிரந்தர இருக்கை: நிதி சேகரிக்கும் முயற்சி இலங்கையில்

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு நிரந்தர இருக்கை: நிதி சேகரிக்கும் முயற்சி இலங்கையில்

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2017 | 5:26 pm

அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் ”தமிழுக்கான நிரந்தர இருக்கை” என்பது தமிழ்த் தாயைப் போற்றுவோரின் நீண்டகால ஏக்கம்.

உலகெங்கிலும் ஏழாயிரத்திற்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன.

அவற்றுள் தமிழ், சமஸ்கிருதம், பாரசீகம், லத்தீன், ஹிப்ரூ, கிரேக்கம் மற்றும் சீனம் ஆகிய ஏழு மொழிகளே செம்மொழிகளாக விளங்குகின்றன.

இதில், தமிழைத் தவிர ஏனைய ஆறு மொழிகளுக்கும் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கைகள் காணப்படுகின்றன.

ஹாவர்ட் பல்கலைக்கழத்தில் மொழிக்கான இருக்கை என்பது அம்மொழி சார்ந்த ஆராய்ச்சித்துறையை அங்கு அமைத்தலாகும்.

இதற்காக இலக்கிய வளம், தொன்மை மற்றும் நடுநிலை போன்ற 11 அடிப்படைத் தகைமைகளில் பெரும்பாலானவை நிரூபிக்கப்பட வேண்டும்.

இருக்கை பெற்றுள்ள ஆறு மொழிகளில், தமிழ் மாத்திரமே 11 அடிப்படைத் தகுதிகளையும் நிரூபித்துள்ளமை சிறப்பும் பெருமையுமாகும்.

தமிழுக்கான நிரந்தர இருக்கையை ஏற்படுத்துவதற்கு ஆறு மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது.

அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர்களான வி.ஜானகிராமனும் ஞானசம்பந்தனும் இதற்கான அடித்தளத்தை இட்டனர்.

தமிழ் இருக்கைக்காக இவர்கள் இவருவரும் தலா அரை மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்காக 10 கோடி ரூபா நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

தமிழ் மொழியார்வலர்கள் நிதியுதவியளித்திருந்த நிலையில், மீதமாக தேவைப்படும் நிதியைத் திரட்டும் முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறையில் ”Sangam Tamil Chair” எனும் பெயரில் இருக்கை அமையவுள்ளது.

தமிழ் இருக்கைக்கு நிதி சேகரிக்கும் உன்னத முயற்சியாக இலங்கையில் முதன் முறையாக இசை நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது.

பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் மற்றும் குழுவினரின் இந்த இசை நிகழ்ச்சி, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (17) நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை மூலம் திரட்டப்பட்ட பணம், தமிழ் இருக்கை அமைப்பதற்கு வழங்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்