யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு: புளொட் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கைது

யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு: புளொட் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கைது

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2017 | 8:22 pm

யாழ். நகரிலுள்ள வீடொன்றிலிருந்து சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவர் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 55 வயதான, புளொட் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆயுதங்கள் மீட்கப்பட்ட வீடு புளொட் இயக்கத்தின் அலுவலகமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், வீட்டின் உரிமையாளர் வௌிநாட்டில் உள்ளதுடன், அதனை மீட்டுத்தருமாறு வீட்டு உரிமையாளரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கின் நிமித்தம் விசாரணைகளுக்காக வீட்டை சோதனையிட்ட போதே அங்கிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஏகே – 47 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் இரண்டும், ஏனைய 396 ரவைகளும் கைத்துப்பாக்கி ஒன்றும் அதன் மகஸின்கள் மூன்றும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், வோக்கி டோக்கிகள் இரண்டும் வாள்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போர் நிறுத்த உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட உடனேயே புளொட் அமைப்பு தங்கள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டப்பட்டதாகக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் 19 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தென்னிந்தியாவில் பயிற்றுவிக்கப்பட்ட புளொட் ஆயுதக் குழு விபரிக்க முடியாத துன்பங்களை தமிழ் மக்களுக்குக் கொடுத்ததுடன் அவர்களது கடத்தல், கப்பம் கோருதல், கொலை, கொள்ளை போன்ற தலைமறைவு நடவடிக்கைகளைத் தடையில்லாது தொடர்ந்ததாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 8 .68 ஆவது பந்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்