குறைந்த செலவுடைய விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் பிரேரணை முன்வைப்பு

குறைந்த செலவுடைய விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் பிரேரணை முன்வைப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2017 | 8:31 pm

குறைந்த செலவுடைய விமான சேவை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சரவைக்கு பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் இணைந்து இந்த அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்துள்ளனர்.

குறைந்த செலவுடைய விமான சேவையான எயார் ஏசியா குழுமத்தின் கீழ் எயார் ஏசியா ஶ்ரீலங்கா என்ற பெயரில் விமான சேவை ஒன்று விமான சேவையை ஆரம்பிப்பதற்கு கடந்த நவம்பர் 15 ஆம் திகதி இந்த கூட்டு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து இந்தியாவிற்கும் அங்கிருந்து தெற்காசியாவின் ஏனைய நாடுகளுக்கும் விமான சேவையை முன்னெடுப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

பின்னர் சீனா மற்றும் ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கு சேவை விஸ்தரிக்கப்படவுள்ளதுடன் அடுத்த கட்டமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஆபிரிக்க நாடுகளுக்கும் விமான சேவை இடம்பெறவுள்ளது.

முதல் ஐந்து வருடங்களில் எயார் ஏசியா ஶ்ரீலங்கா நிறுவனம் ஏ 320 ரக 24 விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த 5 வருடங்களில் இந்த விமான சேவை மூலம் இலங்கைக்கு 9.6 சுற்றுலா பயணிகளை அழைத்துவர முடியும் என அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எயார் ஏசியா நிறுவனத்தின் 12 மில்லியன் பேஸ்புக் உறுப்பினர்கள் ஆறு மில்லியன் ட்விட்டர் உறுப்பினர்கள் மற்றும் 110,000 யூ டுயூப் உறுப்பினர்கள் ஊடாக சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்துவர முடியும் என அமைச்சரவைப்பத்திரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த செலவுடைய விமான சேவை பூரண சேவை வழங்கும் விமான நிறுவனங்களுடன் இணைந்து உலகின் பல நாடுகளில் செயற்படுவதாக பிரதமர் மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோர் சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தனோசியா, இந்தியா வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அதற்கு சிறந்த உதாரணம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நாடுகளில் குறைந்த செலவுடைய விமான சேவையை பூரண விமான சேவையுடன் இணைத்து செயற்பட்டுள்ளததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இதற்காக எயார் ஏசியா நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை பத்திரத்தினூடாக அனுமதி கோரப்பட்டுள்ளது.

பிரதமர் அமைச்சு பதவி வகிக்கும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சுக்கும் சிவில் விமான சேவைகள் திணைக்களத்திற்கும் இந்த கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அமைச்சரவை பத்திரத்தில் கோரப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்