தனியான கூட்டமைப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டி: மஹிந்த ராஜபக்ஸ அறிவிப்பு

தனியான கூட்டமைப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டி: மஹிந்த ராஜபக்ஸ அறிவிப்பு

தனியான கூட்டமைப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டி: மஹிந்த ராஜபக்ஸ அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Dec, 2017 | 7:24 pm

மக்களுக்கு அரசியல் மாற்றுத்திட்டமொன்றை வழங்குவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தனியான கூட்டமைப்பாக இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையான பயணத்தின் ஆரம்பம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கூட்டு அரசாங்கத்தின் கட்சியா அல்லது எதிர்க்கட்சியா என்ற விடயத்தை மாத்திரம் ஆராய்ந்து வாக்களிக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி கூட்டமைப்பிற்கு வந்துவிட்டார் என்ற கருத்துக்களைக் கூறி சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டமைப்பின் செயலாளர்களை ஒரே தடவையில் நீக்கியமை போன்ற காரணங்களால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் விமர்சனங்களை எழுப்பினாலும் இரு தரப்பினரும் ஒரே அமைச்சரவையில் இருப்பதனால் கூட்டு அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கு அனைத்து விடயங்களிலும் ஒத்துழைப்பு வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமை, ஹம்பாந்தோட்டை துறைமுக கொடுக்கல் வாங்கலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பு என்பன அதற்கு சிறந்த உதாரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்க்கட்சியில் ஒரு கட்சியாக நடித்தாலும் அரசாங்கத்தின் அனைத்து ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்