வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2017 | 7:10 pm

மழையுடனான வானிலை குறைவடைந்துள்ள போதிலும், வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நில்வளா, களு மற்றும் கிங் கங்கை ஆகியவற்றில் காணப்பட்ட சிறியளவிலான வௌ்ள அபாயம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த நீர்த்தேக்கங்களின் கீழுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் குறைந்தளவிலான வௌ்ள அபாயம் நிலவவுதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

களுகங்களை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்துள்ளதுடன், புலத்சிங்கள மோல்காவ வீதியின் தம்பல, கரகொட பகுதிகளில் வௌ்ளம் தேங்கியிருந்தது.

கிரமஆர கங்கை பெருக்கெடுத்தமையால், கடந்த இரு தினங்களாக வௌ்ளப்பெருக்கு மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளிலுள்ள வீதிகளில் தேங்கியிருந்த வௌ்ளம் வடிந்தோடியுள்ளது.

எனினும், தாழ்நிலப்பகுதிகளில் நீர் தேங்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது.

மாத்தளை – கம்புறுபிடி ஹொரபாவிட தெற்கு பகுதியில், வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, காலி, மாத்தளை, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அணைக்கட்டுக்களுக்கு அருகில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென, இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஹல்தமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இதல்கஸ்ஹின்ன கீழ்ப்பிரிவில் உள்ள மக்கள் மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் நீட்வுட் பகுதியில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று நேற்று மாத்திரம் அல்ல 1997 ஆம் ஆண்டு முதல் மண்சரிவு அபாயம் காரணமாக தொடர்ச்சியாக இடம்பெயர் வாழ்வியலை முன்னெடுத்து வருகின்றனர்.

மழை மற்றும் அனர்த்த காலங்களில் அருகில் அமைந்துள்ள பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவதும் பின்னர் அபாய நிலை சார் பகுதிகளுக்கு திரும்புவதும் இவர்களது வாழ்வியலில் அங்கமாக உருப்பெற்றுள்ளது.

மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் வீடுகளை நிர்மாணிக்க தோட்ட நிர்வாகம் காணி உரித்து வழங்க முன்வந்துள்ள போதிலும் வீடுகளை அமைப்பதற்கான தேசிய கட்டட ஆய்வு மையத்தின் அறிக்கையை வழங்குவதற்கு பிரதேச அரசியல்வாதிகள் பின்னடிப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை என நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படுவதால் மீனவர்கள் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் வாழ்வாதாரப் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்