ஐ.நாவின் மூவரடங்கிய குழு நாளை இலங்கை வருகை

ஐ.நாவின் மூவரடங்கிய குழு நாளை இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2017 | 7:24 pm

நாளைய தினம் இலங்கைக்கு வரவுள்ள ஐ.நாவின் மூவரடங்கிய குழு, சிறைச்சாலைகள், பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட தடுப்பு நிலையங்களுக்குச் சென்று தகவல்களைத் திரட்டவுள்ளது.

ஐ.நாவின் விசேட நிபுணர் பப்லோ டி கிறீவ் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, சுயாதீனத் தன்மை, வௌிப்படைத் தன்மையுடன் காணாமற்போனோர் அலுவலகத்திற்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே மூவரடங்கிய குழு, இலங்கைக்கு வருகைதரவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மூவரடங்கிய குழுவொன்று நாளைய தினம் இலங்கையை வந்தடையவுள்ளதாக, கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

தன்னிச்சையான தடுத்து வைப்புக்கள் குறித்து ஆராயவுள்ள இந்தக் குழுவினர், சிறைச்சாலைகள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் இளம் குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கும் செல்லவுள்ளது.

அத்துடன், உளவியல் குறைபாடுள்ளவர்கள் மற்றும் இடம்பெயர்ந்துள்ளவர்களை சந்திக்கவுள்ள இந்தக் குழு, நேரடித் தகவல்களை திரட்டவுள்ளது.

நாளை நாட்டை வந்தடையவுள்ள இந்தக் குழுவினர் எதிர்வரும் 15ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக ஐ.நாவின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, மேல், வடமத்திய, தென் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் விஜயம் செய்யவுள்ள இந்தக் குழுவினர், அரச அதிகாரிகள், சிவில் அமைப்புக்களையும் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

விஜயத்தின்போதான பூர்வாங்க கண்காணிப்புத் தொடர்பில், எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் தௌிவுபடுத்தப்படவுள்ளது.

இந்த விஜயத்தின்போது திரட்டப்பட்ட தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கையை அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் இந்தக் குழு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்