​ இளநரை, வழுக்கைத் தலை உள்ள ஆண்களுக்கு இதய நோய் ஏற்படக்கூடும்: ஆய்வில் தகவல்

​ இளநரை, வழுக்கைத் தலை உள்ள ஆண்களுக்கு இதய நோய் ஏற்படக்கூடும்: ஆய்வில் தகவல்

By Bella Dalima

04 Dec, 2017 | 4:29 pm

நாற்பது வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு இதய நோய் ஏற்பட உடல் பருமனைவிட ஆபத்தான காரணியாக இருப்பது இளம் வயதிலேயே முடி நரைத்தல் மற்றும் வழுக்கை விழுதல் தான் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2000 இளம் ஆண்களை வைத்து ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது.

தலைமுடி அதிகம் இருப்பவர்களை விட, இளநரை அல்லது வழுக்கைத் தலை விழுந்த ஆண்களுக்கு இதய நோய்கள் அதிகம் வந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏனைய ஆபத்துக் காரணிகளும் முக்கியம் என பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதய நோய் இருந்த நாற்பது வயதிற்குட்பட்ட ஆண்கள் 790 பேரும், அதே வயதிலிருக்கும் நல்ல உடல்நலத்துடன் இருந்த 1,270 ஆண்களும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்களின் தலை வழுக்கை அளவின் குறிப்பை வைத்து அவர்களின் மருத்துவ வரலாறுகள் எடுக்கப்பட்டன. பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்படும் தலைமுடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்ற விடயங்களும் கணக்கெடுக்கப்பட்டன.

கண்டுபிடிப்புகளை இதய நோய் வர அதிக வாய்ப்புள்ள அறிகுறிகளுடன் தொடர்புபடுத்திப் பார்த்தனர்.

பின்னர், இளநரை இருப்பவர்களுக்கு இதய நோய் வர அதிக வாய்ப்புள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.